திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.48 திருவலிவலம் - திருத்தாண்டகம்
நல்லான்காண் நான்மறைக ளாயி னான்காண்
    நம்பன்காண் நணுகாதார் புரமூன் றெய்த
வில்லான்காண் விண்ணவர்க்கு மேலா னான்காண்
    மெல்லியலாள் பாகன்காண் வேத வேள்விச்
சொல்லான்காண் சுடர்மூன்று மாயி னான்காண்
    தொண்டராகிப் பணிவார்க்குத் தொல்வான் ஈய
வல்லான்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
    வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
1
ஊனவன்காண் உடல்தனக்கோ ருயிரா னான்காண்
    உள்ளவன்காண் இல்லவன்காண் உமையாட் கென்றுந்
தேனவன்காண் திருவவன்காண் திசையா னான்காண்
    தீர்த்தன்காண் பார்த்தன்றன் பணியைக் கண்ட
கானவன்காண் கடலவன்காண் மலையா னான்காண்
    களியானை ஈருரிவை கதறப் போர்த்த
வானவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
    வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
2
ஏயவன்காண் எல்லார்க்கு மியல்பா னான்காண்
    இன்பன்காண் துன்பங்க ளில்ல தான்காண்
தாயவன்காண் உலகுக்கோர் தன்னொப் பில்லாத்
    தத்துவன்காண் உத்தமன்காண் தானே யெங்கும்
ஆயவன்காண் அண்டத்துக் கப்பா லான்காண்
    அகங்குழைந்து மெய்வருந்தி யழுவார் தங்கள்
வாயவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
    வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
3
உய்த்தவன்காண் உடல்தனக்கோர் உயிரா னான்காண்
    ஓங்காரத் தொருவன்காண் உலகுக் கெல்லாம்
வித்தவன்காண் விண்பொழியும் மழையா னான்காண்
    விளைவவன்காண் விரும்பாதார் நெஞ்சத் தென்றும்
பொய்த்தவன்காண் பொழிலேழுந் தாங்கி னான்காண்
    புனலோடு வளர்மதியும் பாம்புஞ் சென்னி
வைத்தவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
    வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
4
கூற்றவன்காண் குணமவன்காண் குறியா னான்காண்
    குற்றங்க ளனைத்துங்காண் கோல மாய
நீற்றவன்காண் நிழலவன்காண் நெருப்பா னான்காண்
    நிமிர்புன் சடைமுடிமேல் நீரார் கங்கை
ஏற்றவன்காண் ஏழுலகு மாயி னான்காண்
    இமைப்பளவிற் காமனைமுன் பொடியாய் வீழ
மாற்றவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
    வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
5
நிலையவன்காண் தோற்றவன்காண் நிறையா னான்காண்
    நீரவன்காண் பாரவன்காண் ஊர்மூன் றெய்த
சிலையவன்காண் செய்யவாய்க் கரிய கூந்தல்
    தோன்மொழியை யொருபாகஞ் சேர்த்தி னான்காண்
கலையவன்காண் காற்றவன்காண் காலன் வீழக்
    கறுத்தவன்காண் கயிலாய மென்னுந் தெய்வ
மலையவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
    வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
6
பெண்ணவன்காண் ஆணவன்காண் பெரியோர்க் கென்றும்
    பெரியவன்காண் அரியவன்காண் அயனா னான்காண்
எண்ணவன்காண் எழுத்தவன்காண் இன்பக் கேள்வி
    இசையவன்காண் இயலவன்காண் எல்லாங் காணுங்
கண்ணவன்காண் கருத்தவன்காண் கழிந்தோர் செல்லுங்
    கதியவன்காண் மதியவன்காண் கடலேழ் சூழ்ந்த
மண்ணவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
    வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
7
முன்னவன்காண் பின்னவன்காண் மூவா மேனி
    முதலவன்காண் முடிவவன்காண் மூன்று சோதி
அன்னவன்காண் அடியார்க்கும் அண்டத் தார்க்கும்
    அணியவன்காண் சேயவன்காண் அளவில் சோதி
மின்னவன்காண் உருமவன்காண் திருமால் பாகம்
    வேண்டினன்காண் ஈண்டுபுனற் கங்கைக் கென்றும்
மன்னவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
    வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
8
நெதியவன்காண் யாவர்க்கும் நினைய வொண்ணா
    நீதியன்காண் வேதியன்காண் நினைவார்க் கென்றுங்
கதியவன்காண் காரவன்காண் கனலா னான்காண்
    காலங்கள் ஊழியாக் கலந்து நின்ற
பதியவன்காண் பழமவன்காண் இரதந் தான்காண்
    பாம்போடு திங்கள் பயில வைத்த
மதியவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
    வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
9
பங்கயத்தின் மேலானும் பால னாகி
    உலகளந்த படியானும் பரவிக் காணா
கங்கைவைத்த சென்னியராய் அளக்க மாட்டா
    அனலவன்காண் அலைகடல்சூழ் இலங்கை வேந்தன்
கொங்கலர்த்த முடிநெரிய விரலா லூன்றுங்
    குழகன்காண் அழகன்காண் கோல மாய
மங்கையர்க்கோர் கூறன்காண் வானோ ரேத்தும்
    வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com